நகராட்சி ஆணையாளர் மீது துப்புரவு தொழிலாளர்கள் புகார் மனு
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மீது துப்புரவு தொழிலாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் தலைமையில், மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.சங்கர் மேஸ்திரி, மாவட்ட பொருளாளர் கே.மனோகரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அதில் வாணியம்பாடி நகராட்சியில் துப்புரவு பணி செய்யும் 86 தொழிலாளர்களிடம் நகராட்சி நிர்வாகம். திருப்பத்தூர் நகராட்சி கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் பெற்ற கடன் தொகையை 2020-ம் ஆண்டு முதல் தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ.1 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ 35 மாதங்களாகியும் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தாததால் தொழிலாளர்களின் அத்தயாவசிய குடும்ப செலவிற்கும், பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும், குடும்ப செலவுக்கும் கூட்டுறவு வங்கியில் கடன்பெற முடியாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தை பணம் கட்டக்கோரி தொழிற்சங்கம் சார்பில் பதிவு தபால் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 19-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய போது ஆணையாளர் 21-ந் தேதிக்குள் கட்டி விடுவதாக கூறினார். ஆனால் இதுவரை கட்டவில்லை. தொழிலாளர்களிடம் பணத்தை பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் செலுத்தாத ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.