பெயிண்டர் மீது தனியார் காவலர் பயிற்சி பள்ளி மாணவர்கள் தாக்குதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
பெயிண்டர் மீது தனியார் காவலர் பயிற்சி பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே கப்பூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 30) என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். எங்கள் வீட்டிற்கு அருகில் தனியார் காவலர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்கள். அப்பள்ளியில் படிப்பவர்கள் இரவில் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். நாங்கள் இரவு நேரங்களில் இயற்கை உபாதைக்காக செல்லும்போது பயிற்சி மைய மாணவர்கள் இடையூறு செய்கின்றனர். சில நேரங்களில் ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுசம்பந்தமாக நான் கடந்த 19-ந் தேதியன்று எனது கணவரிடம் கூறவே அவர், காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டார். இதனால் அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் 10 பேர் திடீரென எங்கள் வீட்டிற்குள் புகுந்து தகாத வார்த்தையால் திட்டியதோடு எனது கணவரை, அந்த பயிற்சி மையத்திற்கு குண்டுகட்டாக தூக்கிச்சென்று கை, கால்களை கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு சரமாரியாக தாக்கினார்கள். இதனை தடுக்கச்சென்ற எங்களையும் அவர்கள் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அதன் பிறகு அன்று இரவு எனது கணவர் கோபாலகிருஷ்ணனை விடுவித்தனர். இதில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை காணை போலீசாரின் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு அவர் உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி காணை போலீஸ் நிலையத்தில் புகார் கூறியும் அவர்கள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக எனது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த புகாரை முறையாக விசாரித்து எனது கணவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.