சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றம்
x

தோகைமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.

கரூர்

போக்குவரத்திற்கு இடையூறு

கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்களது கடைகளின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கொட்டகை அமைத்ததற்கு நெடுஞ்சாலை துறையினர் அபராதம் வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 7-ந்தேதி காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எச்சரிக்கை

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இன்னும் 3 நாட்களுக்குள் குளித்தலை- மணப்பாறை மெயின் சாலையின் இருபுறங்களிலும் அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும்.

அதற்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களே அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அதில் ஒருசிலர் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

முழுமையாக அகற்றம்

இதனையடுத்து நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோகுல்நாத் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குளித்தலை-மணப்பாறை மெயின் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத மீதி இடங்களில் பொக்லைன் எந்திரம் கொண்டு முழுமையாக அகற்றினர். அப்போது சிலர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், அனைத்து பகுதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகள் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அப்போது சாலை ஆய்வாளர் குழந்தைதெரசா, தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

1 More update

Next Story