கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்: பெரும்பாலான கடைகள் மூடல் - பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின...!


தினத்தந்தி 11 March 2023 7:32 PM IST (Updated: 11 March 2023 9:53 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் அறிவித்த முழுஅடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி.யில் நிலக்கரி சுரங்கம் 1, 1ஏ மற்றும் 2 ஆகிய அனல் மின் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரமானது தமிழ்நாட்டில் 40 சதவீத பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ள மின்சாரம் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், நெய்வேலியை சுற்றியுள்ள வடக்கு வெள்ளூர், அம்மேரி, ஆதண்டார் கொள்ளை, கரிவெட்டி, வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, மும்முடி சோழகன், வாணிதராயபுரம், வடக்குத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை கையகப்படுத்தியது.

இதையடுத்து என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9-ந் தேதி விரிவாக்க பணியை தொடங்கியது. ஆனால் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பா.ம.க.வினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து ஆதரவு திரட்டினர்.

இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானதால் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் பாண்டியன் (விழுப்புரம்), பகலவன் (காஞ்சீபுரம்), கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்பட 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பா.ம.க.வினர் அறிவித்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் இன்று காலை முதல் நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் மஞ்சக்குப்பம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன.

கடலூரில் திறந்திருந்த கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.

இதேபோல் நெய்வேலியில் ஒரு சில கடைகள் திறந்திருந்த நிலையில், மந்தாரக்குப்பத்தில் முழுகடையடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடின. விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் கிராம பகுதிகளில் இருந்த கடைகள் மட்டுமே வழக்கம் போல் திறந்து செயல்பட்டன. மேலும் காலைகள் மூடப்பட்டிருந்த அனைத்து கடைகளும், மாலையில் திறக்கப்பட்டன.

மாவட்டத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாலும், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் வழக்கம்போல் திறந்திருந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


Next Story