சேவை வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் - ஜி.எஸ்.டி. ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சேவை வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் - ஜி.எஸ்.டி. ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

இசைப்படைப்புகளுக்கு சேவை வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோருக்கு ஜி.எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து இருவரும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். ஜி.எஸ்.டி., ஆணையத்திடம் இதுகுறித்து 4 வாரத்துக்குள் விளக்கம் அளித்து இருவரும் நிவாரணம் பெறலாம் என்றும் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மேல்முறையீடு செய்தார். அதில், சேவை வரியாக ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் செலுத்துவது குறித்து தனக்கு அனுப்பியுள்ள விளக்க நோட்டீசையும், தனி நீதிபதி தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-

இந்த வழக்கில் காப்புரிமைச் சட்டப்பிரிவுகளை தவறாக கையாண்டு, சேவை வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்து, அந்த இசைப்படைப்பை சினிமா தயாரிப்பாளருக்கு வழங்கிய பின்னர், அந்த இசைப்படைப்புக்கு தயாரிப்பாளர்தான் நிரந்தர உரிமையாளர். அதற்காக இசையமைப்பாளரிடம் வரி கேட்க முடியாது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

''இந்த விளக்கத்தை எல்லாம் ஜி.எஸ்.டி. ஆணையரிடம் மனுதாரர் தரப்பு தெரிவிக்கலாம். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய போகிறோம்'' என்று நீதிபதிகள் கூறினர்.

ஆனால், இதில் பல சட்ட விதிகள் குறித்து வாதம் செய்ய வேண்டியுள்ளது என்று மனுதாரர் தரப்பில் விளக்கம் அளித்து வாதிடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குக்கு பதில் அளிக்கும்படி ஜி.எஸ்.டி. ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.


Next Story