"கம்ப்யூட்டர் முதல் கறிவேப்பிலை வரை" இந்து கடைகளிலேயே வாங்குவோம்; நோட்டீஸ் வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது


கம்ப்யூட்டர் முதல் கறிவேப்பிலை வரை இந்து கடைகளிலேயே வாங்குவோம்; நோட்டீஸ் வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 1:47 PM GMT (Updated: 15 Oct 2022 1:51 PM GMT)

இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என நோட்டீஸ் வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், வெங்கமேடு சோதிடர் தெருவை சேர்ந்தவர் சக்தி. இவர் இந்து முன்னணி அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்துக்கள் அனைவரும் இந்துக்களின் கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என சர்ச்சைக்குரிய வகையில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் !

வியாபாரம் மூலம் நாட்டைக் கைப்பற்றவும். இந்துக்களை பலகீனமாக்கவும் பல அந்நிய சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற ராட்ஷச நிறுவனங்களின் ஆன்லைன் வியாபாரம் மூலம் சிறு, குறு வியாபாரிகளின் நலன்கள் பாதிக்கப்படுவது ஒரு புறம்.

மறுபுறம் ஜவுளி, மளிகை, இறைச்சிக் கடைகள், பூ வியாபாரம். செல்போன், காலணி, மின்சாதனத் தொழில் போன்ற பல தொழில்கள் இந்துக்களிடமிருந்து மெல்ல மெல்ல கை நழுவிச் சென்று கொண்டிருக்கின்றன.

இந்துக்களின் வீடுகள், விளைநிலங்கள், வியாபாரத் தலங்கள் யாவும் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலையில் முஸ்லீம், கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

அரசு சலுகைகள், உரிமைகள் என அனைத்தும் முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கே முன்னுரிமை என்ற நிலையில் வியாபாரமும் இந்துக்களிடமிருந்து பறிக்கப்பட்டால் சொந்த நாட்டிலேயே இந்துக்கள் அடிமைகளாக வாழும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே ஜவுளியானாலும் சரி, மளிகைப்பொருளானாலும் சரி கம்ப்யூட்டர் முதல் கறிவேப்பிலை வரை நாம் வாங்கும் பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்க வேண்டும். கடையில் இந்து சாமி படம் உள்ளதா எனப் பார்த்து வாங்கவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைகுரிய வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்த சக்தியை கைது செய்த போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story