தூத்துக்குடியில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய வாலிபருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தூத்துக்குடியில் நண்பரின் பிரச்சினைக்காக எதிர்த்தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வாலிபருக்கு கத்திகுத்து
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 27). இவரது நண்பர் பாலமுருகன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் நரேஷ்குமார் (23), அய்யாசாமி மகன் சிவக்குமார் (33) மற்றும் ஆத்திபாண்டி மகன் மனோகரன் (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இதுகுறித்து மாரியப்பன் பிரச்சினையை தீர்த்து வைக்க நரேஷ்குமார், சிவக்குமார் மற்றும் மனோகரன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், சிவக்குமார் மற்றும் மனோகரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாரியப்பனை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனராம். காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கைது
இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நரேஷ்குமார், சிவக்குமார் மற்றும் மனோகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட நரேஷ்குமார் மீது ஏற்கனவே 4 வழக்குகளும், சிவக்குமார் மீது 5 வழக்குகளும், மனோகரன் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.