சுங்க கட்டண உயர்வை கண்டித்துலாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கணியூரில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருமத்தம்பட்டி
கணியூரில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுங்க கட்டணம் உயர்வு
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்து உள்ளது. இதில் கோவை- அவினாசி ரோடு கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கணியூர் சுங்கச்சாவடியில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டணம் வருமாறு:-
* கார், வேன், ஜீப் - வாகனம் ஒன்றிற்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.115, அந்த வாகனம் ஒன்றிற்கு 24 மணி நேரத்திற்குள் இருமுறை பயணிக்க ரூ.175.
* இலகு ரக வணிக வாகனம் ஒன்றிற்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.180 மற்றும் 24 மணி நேரத்திற்குள் இருமுறை பயணிக்க ரூ.270.
* டிரக், பஸ் வாகனம் ஒன்றிற்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.365 மற்றும் 24 மணி நேரத்திற்குள் இருமுறை பயணிக்க ரூ.550.
கனரக வாகனங்கள்
* 3 முதல் 6 சக்கர கட்டுமான மற்றும் இதர கனரக எந்திர வாகனம் ஒன்றிற்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.555, 24 மணி நேரத்திற்குள் இருமுறை பயணிக்க ரூ.835.
* 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரம் கொண்ட மிகப்பெரிய வாகனம் ஒன்றிற்கு ஒரு வழி பயணத்திற்கு ரூ.720. 24 மணி நேரத்திற்குள் இருமுறை பயணிக்க ரூ.1,080 என்று புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்த உயர்வை கண்டித்து கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள், மின் லாரி உரிமையாளர்கள் நேற்று கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரில் உள்ள சுங்கச் சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் மத்திய அரசே, மத்திய அரசே சுங்க கட்டணத்தை குறைத்திடு; ரத்து செய், ரத்து செய் கட்டண உயர்வை ரத்து செய் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சங்க தலைவர்கள் சூலூர் ரவிக்குமார், அன்னூர் சரவணன், மேட்டுப் பாளையம் ரமேஷ், எம்.சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர் கள் சங்க நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






