மதநல்லிணக்கத்திற்கு எதிராக பேசியுள்ள ஆ.ராசாவைக் கண்டிக்காது மௌனம் சாதிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்


மதநல்லிணக்கத்திற்கு எதிராக பேசியுள்ள ஆ.ராசாவைக் கண்டிக்காது மௌனம் சாதிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 16 Sep 2022 2:18 PM GMT (Updated: 16 Sep 2022 2:19 PM GMT)

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ள ஆ.ராசாவைக் கண்டிக்காது மௌனம் சாதிக்கும் திமுக அரசுக்கு கண்டனங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்ற சூழ்நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசுவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில், தற்போது தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

தி.மு.க.வின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இந்து மதத்தை புண்படுத்தும் வகையில், இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில், தகாத வார்த்தைகளை, நாகூசும் வார்த்தைகளை, மதசார்பற்ற தன்மைக்கு எதிரான வார்த்தைகளை, மதநல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சினைப் பேசியிருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு மக்களவை உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர், மத்திய அமைச்சராக பதவி வகித்த ஒருவர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தினை இழிவுபடுத்துவதற்கு சமம் ஆகும்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும்போது, "சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும், இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும்" உறுதிமொழி ஏற்றுவிட்டு இன்று அதற்கு முற்றிலும் மாறாக ஆ. ராசா செயல்பட்டு இருக்கிறார். ஆனால், இதைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்காது இருப்பது, தி.மு.க. இதை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இந்துசமய அறநிலையத் துறை அமைச்சரிடம் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றுவிட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமாகும். 'எம்மதமும் சம்மதமே' என்பதற்கேற்ப செயல்படும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டில் யார் எந்த மதத்தை இழிவுபடுத்திப் பேசினாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கமாக, அதனைக் கண்டிக்கும் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கும்.

அந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆ. ராசாவின் பேச்சிற்கும், அதனைக் கண்டிக்காத தி.மு.க.விற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆ. ராசாவின் ஒரு மதத்திற்கு எதிரான பேச்சு மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதோடு மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும்.

பேரறிஞர் அண்ணா வழியில் செயல்படுகிற அரசு என்று அடிக்கடி கூறும் முதலமைச்சர், தி.முக.வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் முதலமைச்சர், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில், இந்துக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள ஆ. ராசாவின் கூற்றினைக் கண்டிக்காதது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும்.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் முதலமைச்சர் என்பதையும், மதநல்லிணக்கத்திற்கு எதிரான இதுபோன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் கடமை என்பதையும் கருத்தில் கொண்டு, ஆ. ராசாவின் கூற்றைக் கண்டிப்பதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு மதத்திற்கு எதிரான பேச்சுக்கள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story