இயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்துஆட்டோ டிரைவர்கள் போராட்டம்


இயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்துஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
x

இயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறையில் பங்கை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

இயற்கை எரிவாயு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறையில் பங்கை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இயற்கை எரிவாயு

பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 400 ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயு(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மூலம் இயங்கி வருகிறது.

கோரிக்கை

மயிலாடுதுறை லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம் மற்றும் சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டுமே எரிவாயு பங்குகள் அமைக்கப்பட்டன. இங்கும் கடந்த 6 மாதங்களாக சரிவர எரிவாயு விநியோகம் செய்யப்படாததால், நகரில் கூடுதல் சி.என்.ஜி எரிவாயு பெட்ரோல் பங்குகளை அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி. எரிவாயு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில், மயிலாடுதுறை அருகில் ஒரு பங்கில் சி.என்.ஜி. இயற்கை எரிவாயு இல்லாததைக் கண்டித்து, ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க சிறப்புத் தலைவர் தங்க.அய்யாசாமி தலைமையில் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடா்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story