மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் ஈடுபட்டனர்.

சென்னை

மீனம்பாக்கம்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. அங்கு 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மீனம்பாக்கம் ரெயிலை நிலையத்தில் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்துக்கு மேலாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சாரரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த ரெயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். அதன்பிறகு கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை சீரானது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story