பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இணைந்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன், அ.ம.மு.க.வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணையில் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சோத்துப்பாறை அணையில் இருந்து மீன் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையில் தேங்கி இருந்த கழிவுநீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர். பின்னர் பேரிஜம் ஏரியில் இருந்து அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அங்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் சோத்துப்பாறை அணைக்கு வந்தது. குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டபோது ஷட்டரில் பழுது ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதனால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடமுடியவில்லை. இதன்காரணமாக கடந்த 4 நாட்களாக நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு குடிநீர் லாரி செல்லவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் இணைந்து காலி குடங்களுடன் பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார். தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சையது கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அடி-உதை
ஆர்ப்பாட்டத்தின்போது, சோத்துப்பாறை அணையில் இருந்து மாசுபட்ட குடிநீரை பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்த பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் மஞ்சுளா முருகன், மாவட்ட பிரதிநிதி அன்பு, அ.ம.மு.க. நகர செயலாளர் செல்லப்பாண்டி, கீழவடகரை ஊராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர். முடிவில் பெரியகுளம் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு நின்ற ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. அவரை அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபரை தென்கரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
எடப்பாடி தரப்பினர்
இதே பிரச்சினைக்காக பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் பெரியகுளம் பழைய பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன், வார்டு செயலாளர்கள் ராஜாங்கம், வெங்கடேசன், கணேஷ், இலக்கியன், ராம்ஜி, ரஞ்சித் ஜெயசீலன், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒரே சம்பவத்தை கண்டித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.