கோவையில் அதிர்ச்சி: ஆர்டர் செய்தது ஐஸ்கிரீம்.. வினியோகம் செய்ததோ ஆணுறை..!


கோவையில் அதிர்ச்சி: ஆர்டர் செய்தது ஐஸ்கிரீம்.. வினியோகம் செய்ததோ ஆணுறை..!
x

கோவையில் உணவு வினியோக நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக ஐஸ்கிரீமிற்கு பதிலாக ஆணுறை வினியோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவையை சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தார். அதற்கான ரூ.207 தொகையையும் ஆன்லைனில் செலுத்திவிட்டார். அதன்படி 30 நிமிடத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வந்து கொடுக்கப்படும் என்று ஆன்லைனில் உள்ள தனியார் உணவு வினியோக நிறுவனம் சார்பில் அந்த நபரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அந்த நபரின் வீட்டில் உள்ள குழந்தைகள் குதூகலத்துடன் இருந்தனர்.

இதற்கிடையே 30 நிமிடங்கள் கழித்து தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியர் அந்த நபரின் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்தார். உடனே அதை வாங்கிய அந்த நபர் அதற்குள் இருக்கும் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்சை எடுத்து தனது குழந்தைகளுக்கு கொடுக்க அந்த பார்சலை பிரித்தார்.

அப்போது அதற்குள் இருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆம்... அந்த பார்சலுக்குள் 2 ஆணுறை (காண்டம்) பாக்கெட்டுகள் இருந்தன. உடனே அவர் தான் ஆர்டர் செய்த அந்த நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு தான் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தேன். ஆனால் ஆணுறை பாக்கெட்டுகளை ஏன் அனுப்பி வைத்து உள்ளீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் பார்சலை மாற்றி அனுப்பி வைத்துவிட்டதாகவும், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்டு உள்ளனர். அத்துடன் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு ஆன்லைன் மூலம் செலுத்திய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கே அனுப்பி வைத்துவிடுவதாகவும் தெரிவித்தனர்.

அதற்கு அவர் இதுபோல வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டாம், சரியாக ஆர்டர் செய்த பொருட்களை கவனித்து அனுப்பி வையுங்கள் என்று அறிவுரை கூறினார். கோவையில் உணவு வினியோக நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story