தங்க ஸ்குருக்களில் அலுமினிய முலாம் பூசி கடத்தல்
தங்க ஸ்குருக்களில் அலுமினிய முலாம் பூசி துபாயில் இருந்து நூதன முறையில் திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
தங்க ஸ்குருக்களில் அலுமினிய முலாம் பூசி துபாயில் இருந்து நூதன முறையில் திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
கடத்தல் தங்கம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்க ஸ்குருக்கள்
அப்போது பயணி ஒருவர் தான் கொண்டு வந்த சூட்கேசில் அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்க ஸ்குருக்களை சூட்கேசின் பக்கவாட்டு சட்டங்களில் பொருத்தி நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வரப்பட்ட தங்க ஸ்குருக்களின் மதிப்பு ரூ.14 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.