பொம்மிடி அருகேமண் வெட்டி கடத்தல்-2 பேர் கைதுபொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்
தர்மபுரி:
பொம்மிடி அருகே மண் கடத்தல் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர் கண்காணிப்பு
சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்துவதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர் பொம்மிடி அருகே வாசி கவுண்டனூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் சிலர் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி கிராவல் மண்ணை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். கண்காணிப்பு பணி மேற்கொண்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
2 பேர் கைது
அப்போது அரசின் முறையான அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம், லாரி மற்றும் 2 யூனிட் கிராவல் மண்ணை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய பொம்மிடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 47), பச்சியப்பன் (26) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.