தணிக்கைக்கு கொண்டுவராத ஆட்டோக்கள் இயங்கினால் பறிமுதல்
தணிக்கைக்கு கொண்டுவராத ஆட்டோக்கள் இயங்கினால் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
பள்ளிகள் நேற்று திறந்த நிலையில் தேவகோட்டை நகரில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களின் ஆவணங்களை தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தணிக்கை செய்தனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகனத்தின் ஆவணங்களை முறையாக புதுப்பிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டும் போது சீருடையில் இருக்க வேண்டும். குடிபோதையில் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல முறையான அனுமதி பெற வேண்டும். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என பல்வேறு அறிவுரைகளை வழங்கி தணிக்கையில் கலந்து கொள்ளாத ஆட்டோ ஓட்டுனர்கள் மாலை 5 மணிக்குள் போலீஸ் நிலையத்தில் வாகனம் மற்றும் ஆவணங்களுடன் ஆஜராகி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். காவல் தணிக்கைக்கு கொண்டு வராத ஆட்டோக்கள் நகரில் இயக்குவது கண்டு பிடிக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.