மேச்சேரி அருகே 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது


மேச்சேரி அருகே  3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்  5 பேர் கைது
x

மேச்சேரி அருகே 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

மேச்சேரி,

அரிசி கடத்தல்

மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி வெள்ளப்பம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை மினி டெம்போவில் கடத்துவதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதையன், சாந்தி, பரமசிவம், தனிப்பிரிவு ஏட்டு பச்சமுத்து மற்றும் போலீசார் வெள்ளப்பம்பட்டி பகுதியில் ஒரு மினி டெம்போவில் ரேஷன் அரிசியை ஏற்றி கடத்துவதற்கு தயாராக இருந்தபோது சென்று பிடித்தனர்.

5 பேர் கைது

அப்போது அங்கிருந்த மினி டெம்போ டிரைவர் நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து (வயது 21), இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37), புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (31), மேச்சேரியை சேர்ந்த சேட்டு (32), புக்கம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மல்லசமுத்திரத்தில் ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரையும், மாவட்ட உணவு மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆள் கடத்தல் வழக்கு

இதற்கிடையே அரிசி கடத்தல் வழக்கில் சிக்கிய சேட்டு மீது ஆள் கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்கிலும் சேட்டுவை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story