21 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது
தொண்டி அருகே 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டி,
தொண்டி அருகே 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் ரோந்து
ராமநாதபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லலிதா மற்றும் போலீசார் போதை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடற்கரை அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முள்ளி முனை கிராமத்தை சேர்ந்த ராஜா(வயது 37), மதுரை நரிமேடு சிங்கராயர் காலனி ஷேக் முகமது இப்ராஹிம்(29), திருவெற்றியூர் புதுப்பையூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(34), அ.மணக்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன்(31), ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பெத்தகவுட்டா பள்ளி ஸ்ரீஹரி(37), அதே பகுதியை சேர்ந்த ஷேக்கூஸ்(28) என்பது தெரிய வந்தது.
6 பேர் கைது
மேலும் முள்ளி முனை கிராமத்தை சேர்ந்த ராஜா வீட்டின் பின்புறம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ஷேக் முகமது இப்ராஹிம், பாக்கியராஜ், கணேசன், ஸ்ரீஹரி, ஷேக்கூஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கடற்கரை வழியாக படகுகளில் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.