புழல் சிறையில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் 3 கைதிகளிடம் இருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக சிறையில் உள்ள கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிறைக்குள் இவர்களுக்கு செல்போன், கஞ்சா எப்படி கிடைக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் சிறைக்குள் கைதிகள் செல்போன் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதை தடுக்கவும் சிறை போலீசார் தினந்தோறும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று வழக்கம்போல் சிறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொலை முயற்சி வழக்கில் கைதான சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (வயது 29) என்ற கைதியிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருட்டு வழக்கில் சுங்குவார்சத்திரம் போலீசாரால் கைதான பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) என்ற கைதியிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவும், கஞ்சா வழக்கில் கைதான மதுரவாயலைச் சேர்ந்த பிரபாகரன் (30) என்ற கைதியிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
3 கைதிகளிடம் இருந்தும் மொத்தம் 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சிறை போலீசார், இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் கைதிகளுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகிறார்.