மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் பறிமுதல்
மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை வெளியே அவிழ்த்து விட்டு விட்டனர். இதனால் அந்த ஆடுகள் புகழூர் நகராட்சி சார்பில் சாலையின் இருபுறமும் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை மேய்ந்து சேதப்படுத்தி உள்ளது. இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் ஏற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பந்தப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்களை வரவழைத்தார். பின்னர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இனிவரும் காலங்களில் தங்கள் வீட்டில் உள்ள ஆடுகளை அவிழ்த்துவிட்டு சாலை ஓரத்தில் நடப்பட்டு இருக்கும் மரக்கன்றுகளை சேதப்படுத்த மாட்டோம் அவ்வாறு சேதப்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து ஆடுகள் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.