காரில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
வாகன சோதனை
ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார், மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 218 கிலோ குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தது.
இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சேராமல்லி (வயது43) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா பறிமுதல்
தொடர்ந்து போலீசார் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.






