வேன்களில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவிற்கு வேன்களில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கர்நாடகாவிற்கு வேன்களில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரகசிய தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது குப்பச்சிப்பாறை பஸ் நிறுத்தம் அருகில் குருபரப்பள்ளியில் இருந்து கொத்தகிருஷ்ணப்பள்ளி சாலையில் வந்த வேனை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில், சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான, 41 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.
4 டன் அரிசி பறிமுதல்
இதையடுத்து வேன் டிரைவர் சூளகிரி அடுத்த காளிங்காபுரத்தை சேர்ந்த வடிவேலு (33) என்பதும், இந்த ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல சென்னசந்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நின்ற வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான 43 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பதும், வேன் உரிமையாளர் செம்படமுத்தூரை சேர்ந்த மணி என்பதும் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். உரிமையாளர் மணி மற்றும் சாமல்பள்ளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.