முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்
கோமல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குத்தாலம்:
கோமல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசியின் கணவரான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த செல்வராஜ் (60) என்பவருக்கும் ஊர் நாட்டாண்மை நியமனம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி இரவு செல்வராஜின் உறவினர் குணசேகரன் என்பவரது வீட்டிற்கு அருகே செல்வராஜ் தரப்பிற்கும் பாலசுப்பிரமணியன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
6 பேர் மீது வழக்குப்பதிவு
அப்போது பாலசுப்பிரமணியனின் தம்பி காமராஜ், மகன் ராம்குமார், தம்பி மகன் ரஞ்சித் ஆகியோர் அரிவால் மற்றும் கட்டையால் தாக்கியதில் செல்வராஜ், குணசேகரன், குணசேகரன் மனைவி ஹேமலதா, உறவினர் பிரிதிவிராஜ் ஆகியோர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ்,குணசேகரன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் பாலசுப்பிரமணியன், காமராஜ், ராம்குமார், ரஞ்சித் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல பாலசுப்பிரமணியன் தம்பி மகன் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ், குண்சேகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோமல் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக தொடர் மோதல் ஏற்பட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.