ராமேசுவரத்தில் நாளை காங்கிரஸ் பொதுக்கூட்டம்
ராமேசுவரத்தில் நாளை காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது.
ராமேசுவரம்,
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் பாம்பனை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பாம்பனில் உள்ள காங்கிரஸ் பவனில் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்று விழா நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
தொடர்ந்து பா.ஜ.க. அரசின் மீனவர் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகிறார். இதில், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ராமேசுவரம் நகர் தலைவர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.