காங்கிரஸ் கட்சியினர் மறியல்;41 பேர் கைது


காங்கிரஸ் கட்சியினர் மறியல்;41 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2023 7:00 PM GMT (Updated: 23 March 2023 7:00 PM GMT)

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

மறியல் போராட்டம்

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் 1.30 மணி அளவில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல்காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற பொய் வழக்கை கண்டு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது. எனவே ராகுல்காந்தியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

41 பேர் கைது

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் காரணமாக பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வடக்கு போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அப்துல்ரகுமான் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ராகுல்காந்தி கைதை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபால்பட்டி

இதேபோல் கோபால்பட்டி பஸ்நிறுத்தத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சாணார்பட்டி தெற்கு வட்டார தலைவர் ராஜ்கபூர் தலைமை தாங்கினார்.

சாணார்பட்டி வடக்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி கைது செய்ததை கண்டித்தும், பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story