தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் இந்தியை திணிக்காது கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் இந்தியை திணிக்காது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்.
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு சி.பி.ஐ.க்கு அளித்திருந்த ஒப்புதலை திரும்ப பெற்றது குறித்து கோர்ட்டு தான் தீர்வு காண முடியும். மாநிலத்தில் 500 மதுக்கடைகள் மூடுவதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. மேலும் பூரண மதுவிலக்கு என்பதிலும் நம்பிக்கை இல்லை ஆட்சேபனை உள்ள இடங்களில் குறைப்பது நல்லது. அமலாக்கத்துறை இருப்பதே மனித உரிமை மீறல் தான் அமலாக்கத்துறை என்பது நிதி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. போதை பொருள் தடுப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்றவை குறித்து தான் அவர்கள் விசாரிக்க முடியும். ஆனால் தற்போது அமலாக்கத்துறை என்பது அடக்க முடியாத அளவுக்கு பூதமும் பிசாசுமாக மாறி வருகிறது. தொலைக்காட்சிக்காக மட்டுமே சோதனைகள் நடத்தப்படுகிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்த மட்டும் தான் உத்தரவிட்டுள்ளது. சோதனைக்கோ கைது செய்யவோ உத்தரவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது தற்போது காலத்தின் கட்டாயம். இந்தியா தற்போது சென்று கொண்டிருக்கும் அபாயகரமான பாதையில் இருந்து ஜனநாயக பாதைக்கு செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த காலத்திலும் இந்திைய திணிக்காது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய அரசியலிலேயே ஒரு பங்களிப்பு கண்டிப்பாக உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.