கருப்பு பலூன்கள் பறக்கவிட முயன்ற காங்கிரசார் கைது
கோவில்பட்டியில் கருப்பு பலூன்கள் பறக்கவிட முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கத்தை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சுகாதேவி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பி.அய்யலுசாமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முத்து, கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகியோர் கைகளில் 'கோ பேக்' மோடி என்று எழுதப்பட்டிருந்த கருப்பு பலூனுடன் வந்தனர். அப்போது அவர்களை போலீசார், தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பலூன்களை உடைத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.