கூட்ட நெரிசலை குறைக்க மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு


கூட்ட நெரிசலை குறைக்க மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு
x

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் உள்ளது. குறைந்த செலவில், விரைவாக சென்னைக்கு வந்து செல்ல மின்சார ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி வழித்தடத்தில் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் தோறும் 8 லட்சத்தும் மேற்பட்டோர் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் பயணிகளின் வருகை இருமடங்காக அதிகரிக்கும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே, கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் தற்போது 9 ஆக உள்ள மின்சார ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது.

இதற்காக ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் பெரம்பூர் ரெயில்பெட்டி இணைப்புதொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வேகமாக நடந்து வருகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் புறநகர் ரெயில்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப புதிய பெட்டிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

புதிய பெட்டிகளை இணைக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும். அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

பெட்டிகளை கூடுதலாக இணைக்கும் போது அதற்கு ஏற்ப ரெயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளின் நீளம் இருக்க வேண்டும் என்பதால் நடைமேடைகளை நீட்டிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story