"தாமிரபரணியை பொருநை நதி என பெயர் மாற்ற பரிசீலியுங்கள்"-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தாமிரபரணியை பொருநை நதி என பெயர் மாற்ற பரிசீலியுங்கள்-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தாமிரபரணி ஆற்றின் பெயரை தமிழ் பெயரான பொருநை நதி என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 12 வாரத்தில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை,

தாமிரபரணி ஆற்றின் பெயரை தமிழ் பெயரான பொருநை நதி என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 12 வாரத்தில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பொருநை நதி

தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த பொன்காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. தாமிரம் என்பது வடமொழிச் சொல். முற்காலத்தில் இந்த ஆறு 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல சங்க இலக்கியங்களில் தற்போதைய தாமிரபரணி ஆற்றினை பொருநை நதி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். பல்வேறு அகழாய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

எனவே தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி என மீண்டும் மாற்றி அழைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

குடிமகனின் கடமை

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, அரசியலமைப்பின்படி, நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்த வகையில் தாமிரபரணியை பொருநை என பெயர் மாற்றக்கோரி மனு அளித்தும் பலன் இல்லை. ஆனால் தொல்லியல் துறையினர், இந்த ஆற்றை தற்போது பல இடங்களில் பொருநை என குறிப்பிடுகின்றனர். தாமிரபரணியை அதிகாரப்பூர்வமாக பொருநை நதி என மாற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

"தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி" என பாரதியார் பாடியுள்ளார்.

இதேபோல, "பொருநையந் திருநதியின் இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே"-என்ற பாட்டின் மூலம் பூஞ்சாலி வகை நெல்லை இருபோகம் விளைவிக்க பொருநை நதி உதவியாக இருக்கிறது என தாமிரபரணியின் பெருமை பாடப்பட்டுள்ளது.

பரிசீலியுங்கள்

இவ்வாறு ஏராளமான பாடல்களில் தாமிரபரணியை பொருநை நதி என அழைத்துள்ளனர். அந்த வகையில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சரும் அறிவித்து உள்ளார் என மனுதாரர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனுதாரரின் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அரசு வக்கீல் தெரிவித்திருக்கிறார். அதன்படி தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை என மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story