தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி


தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
x

தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

சென்னையில் இருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே மாலை 6 மணி அளவில் சென்ற போது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த பெரிய இரும்பு துண்டு மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் அந்த இரும்பு துண்டுகள் உடைந்து சிதறின. பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் கீழே இறங்கி சத்தம் வந்த பெட்டி அருகே சென்று பார்த்தபோது அந்த பெட்டியில் படிக்கட்டுகள் உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நான்கு ஸ்லீப்பர் கட்டைகளும் சேதமாகி இருந்தது. தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் ஆங்காங்கே நொறுங்கி கிடந்தன.

இதுகுறித்து என்ஜின் டிரைவர் உடனடியாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ரெயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாம் என தெரிகிறது. பின்னர் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனையிட்டனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில்வே போலீசார் ரெயிலை கவிழ்க்க சதி செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story