கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணியில் கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
ஆரணியில் கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட பொறியாளர்
ஆரணி அருணகிரி சத்திரம் சத்தியமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் புரந்தரன் (வயது 65). கட்டிட பொறியாளர். இவரது மனைவி காமாட்சி 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
மூத்த மகன் ரவிக்கு திருமணம் செய்து குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து கேட்டுள்ளது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புரந்தரன் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விரைவு
மகன்கள், மகள் மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது புரந்தரன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஆரணி நகரப் போலீசார் புரந்தரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
பரபரப்பு கடிதம்
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் ரவிக்கு மீனா என்பவரை பெண் பார்த்து திருமணம் செய்ய பேசப்பட்டது. ஆனால் மீனா, திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் மகன் ரவி வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மீனா, புரந்தரனிடம் போனில் பேசி ஏன் உங்கள் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பினீர்கள் என ஆபாசமாக பேசி வந்ததாகவும் ரூ.15 லட்சம் தர வேண்டும் எனவும் பேசி போன் மூலம் தொந்தரவு செய்துள்ளார். இதனால் நான் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்'' என கடிதத்தில் எழுதி உள்ளார்.
இதுகுறித்து இறந்த புரந்தரனின் மகன் மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.