ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி
ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
புதிய பஸ் நிலையம்
ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்துவிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- வளர்ந்து வரும் நகரமான ராமநாதபுரத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து செல்லும் வகையில் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே இருந்து வந்தது. அதனடிப்படையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டுக்குள்...
இதன் மூலம் மதுரை, கோயம் புத்தூர், திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வர இந்த பஸ் நிலையம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிய பஸ் நிலையம் கட்டும் பணி 1 ஆண்டுக்குள் முடிக்கப்படும். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.