தடுப்புக்கம்பி அமைக்கும் பணி
பழனி கோசாலை தெப்பக்குளத்தில், தடுப்புக்கம்பி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பழனி மேற்கு கிரிவீதி அருகே சுற்றுலா பஸ்நிலைய பகுதியில் கோசாலை தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கி உள்ள தண்ணீரில் தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளம் முன்பு நின்று செல்பி எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பஸ்நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி செல்லும் பக்தர்கள், அங்கு சமைத்து சாப்பிடுவதோடு குப்பைகளையும் அங்கு போட்டு செல்கின்றனர். இதனால் கோசாலை தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்தது. இதேபோல் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் குழந்தைகள் தவறி குளத்தில் விழும் அபாயம் நிலவியது. எனவே தெப்பக்குளத்தை சுற்றிலும் தடுப்புக்கம்பி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைக்கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை தெப்பக்குளத்தை சுற்றிலும் இரும்பிலான தடுப்புக்கம்பி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.