வெள்ளப்பள்ளத்தை 2 கிராமங்களுடன் இணைக்க ரூ.14 கோடியில் பாலங்கள் கட்டும் பணி


வெள்ளப்பள்ளத்தை 2 கிராமங்களுடன் இணைக்க ரூ.14 கோடியில் பாலங்கள் கட்டும் பணி
x

சீர்காழி அருகே தீவு கிராமமான வெள்ளப்பள்ளம் கிராமத்தை மேலும் 2 கிராமங்களுடன் இணைக்க ரூ.14 கோடியில் 2 பாலங்கள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

சீர்காழி அருகே தீவு கிராமமான வெள்ளப்பள்ளம் கிராமத்தை மேலும் 2 கிராமங்களுடன் இணைக்க ரூ.14 கோடியில் 2 பாலங்கள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

உப்பனாறு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமமாக வெள்ளப்பள்ளம் திகழ்கிறது. இங்கு சுமார் 750 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் 3 பக்கமும் உப்பனாரால் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் சீர்காழி, திருவெண்காடு மற்றும் புதுத்துறைக்கு செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படகுதோனியை பயன்படுத்தி வந்தனர். அதன் பின் புதுத்துறைக்கு செல்ல ஒரு சிறு நடைபாலமும், கீராநல்லூர் வழியாக சீர்காழி செல்ல ஒரு நடைபாலமும் அமைக்கப்பட்டது.

பாலங்கள்

இதன் மூலம் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வந்தது. மழை, வெள்ள காலங்களில் தற்காலிக பாலங்கள் ஆற்றில் அடித்து செல்வது அடிக்கடி நடைபெற்றது. அந்த நேரங்களில் பொதுமக்கள் வெள்ளப்பள்ளத்தை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பொதுமக்கள் இந்த ஊரை வெள்ளப்பள்ளம் மற்றும் கீராநல்லூர் பகுதியோடு இணைக்க வசதியாக பாலங்கள் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கைகள் பற்றி இந்த தொகுதியில் இருந்து கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெள்ளப்பள்ளம் பகுதியை கீராநல்லூர், புதுத்துறை பகுதிகளோடு இணைக்க பாலங்கள் சாலை வசதி செய்து தர கேட்டு, தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்.

ரூ.14 கோடி

இந்த கோரிக்கை குறித்து கடந்த ஆண்டு திருவெண்காட்டுக்கு வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி அதிகாரிகள் வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது வெள்ளப்பள்ளம் கிராமத்தை இணைக்க வசதியாக 2 பாலங்கள் கட்ட ரூ. 14 கோடியை பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

தற்போது இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீண்ட கால கோரிக்கை நிறைவேறி வருவதால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கூறியதாவது:-நான் ஒன்றியக்குழு தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அடிக்கடி வெள்ள பள்ளம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தேன். அப்போது பொதுமக்கள் பாலம் கட்டித்தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.இதை ஏற்று உடனடியாக அவர் இரண்டு பாலங்கள் கட்ட ரூபாய் 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது 2 பாலங்கள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 75 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story