பக்கிள் ஓடை பகுதியில்சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை பகுதியில்சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி மேயர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி 3-ம் மைலில் இருந்து திரேஸ்புரம் வரையிலான பக்கிள் ஓடை கரையின் இருபுறமும் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்தில் இந்த புதிய சாலையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாலையின் நடுவிலும் மற்றும் சாலையின் உட்பகுதிகளிலும் மிகவும் ஆபத்தான வகையில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்து வருகிறது.
இதனால் இந்த பகுதிகளை மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி 4-ம் ெரயில்வே கேட் ஓடைப்பாலம் முதல் 3-ம் மைல் வரையிலும் இந்த ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில், பக்கிள் ஓடையின் இருபுறமும் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணியின் போதே சாலைப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் சாலையின் நடுவில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து மின் கம்பங்களையும் மாற்றி அமைக்க மின் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த புதிய சாலையில் சில இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விபத்துக்களை தடுக்க தேவையான மும்முனை, நான்குமுனை சாலை சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைக்கவும், வேகத்தடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், சமூகஆர்வலர் எம்பவர் சங்கர், மேயரின் உதவியாளர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.