சென்னை-கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணி திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு
சென்னை-கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணியை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தாா்.
விருத்தாசலம்,
சென்னை கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் அளவிற்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 54 இடங்களில் சிறு மற்றும் குறு பாலங்கள் புனரமைத்தல், மறுசீரமைத்தல், புதிதாக கட்டுதல் மற்றும் 37 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்தல், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலைகள் தரமாக அமைக்கப்படுகிறதா? சாலையின் அளவுகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்த அவர் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவிக்கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் எழிலரசி மற்றும் ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.