ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தம்


ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Aug 2023 8:00 PM GMT (Updated: 23 Aug 2023 8:00 PM GMT)

வால்பாறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.8 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாத முதல் வாரம் வரை பெய்யக்கூடிய பருவமழை காலங்களில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த சமயத்தில் வாழைத்தோட்டம், கக்கன்காலனி, காமராஜர் நகர் ஆகிய இடங்களில் உள்ள ஆற்றங்கரையோர பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய நிகழ்வாக இருந்து வருகிறது.

இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் வாழ்ந்து வரக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் காமராஜர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் 2¼ ஹெக்டர் பரப்பளவில் ரூ.8 கோடியில் 112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி தொடங்கப்பட்டது.

ஆய்வு இல்லை

ஆனால் அந்த பணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சுமார் 4 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் பணிகளை முடித்து, யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை.

இதற்காக ஏராளமானவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்களும் பெறப்பட்டு உள்ளது. ஆனால் எந்தவொரு அதிகாரிகளும் கட்டுமான பணிகள் நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்வதற்கு கூட வருவது இல்லை.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 4 ஆண்டுகளாக மந்தமாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் பணிகளே நடைபெறுவது இல்லை.

வருகிற நாட்களில் தென்மேற்கு பருவமழை வால்பாறை பகுதியில் தீவிரமாக பெய்வதற்கான சூழல் உள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், குடிசை மாற்று வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story