திருவான்மியூரில் கியாஸ் துணை மின்நிலையம் அமைக்கும் பணி - அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு


திருவான்மியூரில் கியாஸ் துணை மின்நிலையம் அமைக்கும் பணி - அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு
x

திருவான்மியூர் மற்றும் தரமணியில் புதிதாக அமையவுள்ள கியாஸ் துணை மின்நிலையங்களின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

சென்னை

சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் ரூ.92.55 கோடியில், தமிழகத்திலேயே முதன்முறையாக, முழுவதுமாகவே 'எண்முறை தொழில் நுட்பத்தில்' அமைக்கப்பட்டு வரும் கியாஸ் துணை மின்நிலையத்தின் கட்டுமான பணிகளை, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் (மின் தொடரமைப்பு கழகம்) இரா.மணிவண்ணன், இயக்குனர் (திட்டம்) ராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து, தரமணியில் ரூ.708 கோடியில் கியாஸ் துணை மின்நிலையமாக தரம் உயர்த்தி மேம்படுத்துவதற்காக நடந்து வரும் கட்டுமான பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தற்போது இயங்கி வரும் துணை மின்நிலையத்தையும் பார்வையிட்டு செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

திருவான்மியூரில் அமையவுள்ள துணை மின்சார நிலையம் மற்றும் தரமணியில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும் துணை மின்சார நிலையம் மூலம் திருவான்மியூர், தரமணி, பெசன்ட் நகர், காந்திநகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதிகளிலுள்ள சுமார் 4 லட்சம் மின்சார நுகர்வோர்களுக்கு தடையற்ற, தரமான மின்சாரம் வழங்க இயலும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் அதிவேக வளர்ச்சி பெற்று வருவதால் பெருகி வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு அமைச்சர் இந்த பணிகளை விரைந்து முடித்து புதிய துணை மின்சார நிலையங்களை இயக்கத்துக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

1 More update

Next Story