மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருவதால் ஒருவழிப்பாதையில் வாகன இயக்கப்பட்டு வருகிறது
விழுப்புரம்
மழைநீர் வடிகால் வாய்க்கால்
விழுப்புரம் நகரில் மழைக்காலத்தின்போது முக்கிய சாலைகளிலும் மற்றும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லாததாலும், ஏற்கனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும் சாதாரண மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்று வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.இதனால் மழைக்காலங்களின்போது சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய இடங்களில் சாலையை கடந்து செல்லும் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒருவழிப்பாதையில்....
அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே தற்போது மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் காரணமாக காலை, மாலை நேரங்களில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முதல் நான்குமுனை சந்திப்பு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி செல்கிறது. இந்த வாய்க்கால் பணிகள் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை வாகனங்கள் ஒருவழிப்பாதையிலேயே இயக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.






