பொல்லான் அரங்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
பொல்லான் அரங்கம் அமைக்கும் பணி வரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினார்.
பொல்லான் அரங்கம் அமைக்கும் பணி வரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினார்.
ஆலோசனை கூட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய தீரன் சின்னமலையின் படைத்தளபதியான பொல்லானுக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மொடக்குறிச்சி தாலுகா நல்லமங்காபாளையத்தில் சுமார் 18 சென்ட் நிலப்பரப்பில் பொல்லான் நினைவு மண்டபம் அமைப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அந்த இடம் போதுமானதாக இல்லையெனவும், கூடுதல் இடத்தில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் எனவும் பொல்லானின் வாரிசுதாரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கோாிக்கை வைக்கப்பட்டது.
நூலகம்
அதன்படி மொடக்குறிச்சி தாலுகா ஜெயராமபுரத்தில் சுமார் 41 சென்ட் நிலப்பரப்பில் ரூ.1 கோயே 82 லட்சம் செலவில் பொல்லான் முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான அரசாணை கடந்த 19-7-2021 அன்று வெளியிடப்பட்டது அங்கு பல்வேறு வசதிகளுடன் அரங்கம் அமைப்பதற்கு தேவையான கூடுதல் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவு கிடைத்தவுடன் பொதுப்பணித்துறையின் மூலமாக உடனடியாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
குதிரையின் மீது பொல்லான் அமர்ந்திருக்கும் வடிவத்தில் சிலை அமைக்கவும், நூலகம், வரலாற்று விவரங்கள் அடங்கிய கல்வெட்டு அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு ஆா்.டி.ஓ. சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.