கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த ஆட்சிப்போல பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், தைத்திருநாளில் பொங்கல் தொகுப்புடன் கூடுதல் நிதி வழங்க வேண்டும், கட்டிட கட்டுமான தொழிலாளர் அகில இந்திய சட்டம், நலவரி சட்டங்களை எந்த சட்ட தொகுப்புடனும் இணைக்கக்கூடாது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், நாராயணன், வேலு, செல்வக்குமார், வெங்கடேசன், சண்முகம், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பச்சையப்பன் மற்றும் செல்வரங்கம், முனுசாமி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் விஜயகுமார், செந்தில், வீராசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜி, நிர்வாகிகள் பூமாலை, ரீட்டா, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story