செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி போராட்டம்


செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2022 7:30 PM GMT (Updated: 5 Nov 2022 7:30 PM GMT)

சங்ககிரியில் மனைவி, குழந்தையுடன் சேர்த்து வைக்க கோரி, கட்டிட தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சங்ககிரி:-

சங்ககிரியில் மனைவி, குழந்தையுடன் சேர்த்து வைக்க கோரி, கட்டிட தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட தொழிலாளி

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் கருமாபுரம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் அமிதாபச்சன் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இருவரும் பிரிந்து சென்று விட்டனர்.

இந்தநிலையில் அமிதாபச்சன் தனது உறவினருடைய மனைவி பார்வதியை 2-வது திருமணம் செய்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ரோகித் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது.

கணவரை பிரிந்தார்

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் அமிதாபச்சனுக்கும் 2-வது மனைவி பார்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் பார்வதி தனது குழந்தையுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார்.

இது குறித்து மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் அமிதாபச்சன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து பேசி உள்ளனர். ஆனால் கணவருடன் வாழ முடியாது என பார்வதி கூறி விட்டதாக தெரிகிறது.

செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

இந்த நிலையில் மனைவி பார்வதியையும், தனது குழந்தையையும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டி நேற்று மாலை 4 மணியளவில் சங்ககிரியில் திருச்செங்கோடு ரோட்டில் தனியார் கல்லூரி அருகே 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது அமிதாபச்சன் ஏறி போராட்டம் செய்தார். இது குறித்து அவரே 108 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அமிதாபச்சனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆனால் அவர் மனைவி, குழந்தையுடன் வந்தால் தான் நான் கீழே இறங்குவேன் எனக்கூறி விட்டார்.

தாயார் அழைப்பு

இதைத்தொடர்ந்து சங்ககிரி தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இரவு 7.30 மணியளவில் அமிதாபச்சன் தாயார் நல்லமாள் வந்து மகனை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு பேசினார். தனது மனைவி, மகன் வந்தால் தான் கீழே இறங்குவதாக கூறிவிட்டு செல்போனை அழைப்பை துண்டித்து விட்டார்.

இரவு 8.30 மணியளவில் சங்ககிரியில் லேசான மழை பெய்தது. அதன்பிறகும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து சங்ககிரி போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கட்டிட தொழிலாளியை செல்போன் கோபுரத்தில் இருந்து மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

====


Next Story