எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு: கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாக்குவாதம் கடலூரிலேயே அமைக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்


எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு:    கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசார வாக்குவாதம்    கடலூரிலேயே அமைக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
x

எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒருவருக்கொருவர் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சியினர் கடலூரிலேயே புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கடலூர்


புதிய பஸ் நிலையம்

கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்த கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை வகை மாற்றம் செய்து, புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால், கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்கேட்பு கூட்டம்

இதற்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தவிர அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும், பொது நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து போராடின.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அனைத்து கட்சிகள் வலியுறுத்தின. அதன்படி கடந்த 18-ந்தேதி கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடலூர் பாரதிசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.

மனு அளித்தனர்

கூட்டத்துக்கு கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக நேரில் அதிகாரிகளிடம் அளித்ததோடு, அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியிலும் போட்டனர். சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது கட்சிக்கு ஒருவர் வீதம் பேச அனுமதி அளிக்கப்பட்டது.

எதிர்ப்பு

அதன்படி அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி துணை செயலாளர் தங்கமணி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத் முயற்சியால் புதிய பஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த இடத்தை மாற்றி எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். மீறி அங்கு கொண்டு சென்றால் அ.தி.மு.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், தி.க.வினர். அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, தமிழ்மாநில காங்கிரஸ் ரகுபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சாமிரவி, குடியிருப்போர் நலச்சங்கம் மருதவாணன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரிவாக்கம்

மேலும் சிறப்பு வல்லுனர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து, மக்கள் கருத்துகளையும் கேட்டு மாநகர மையப்பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். தற்போது உள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பாதிரிக்குப்பம் பகுதியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த கருத்துகளை கேட்ட அதிகாரிகள், இது பற்றி மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி, கடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் தான் எம்.புதூருக்கு புதிய பஸ் நிலையத்தை மாற்ற நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். முன்னதாக

வாக்குவாதம்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் எம்.புதூரை சேர்ந்த சிவராஜ் என்பவர் பேசுகையில், கடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். இதை கேட்டதும் அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை துணை மேயர், அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து பா.ம.க. சந்திரகாசன், கேப்பர் மலையில் இருந்து தான் நகர மக்களுக்கு தண்ணீர் தருகிறோம். எங்கள் பகுதியில் பஸ் நிலையம் அமைய கூடாதா, இல்லையென்றால் உங்களுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்றார். இதற்கும் பல்வேறு தரப்பினா் அவர்களிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழர் கழகம் பரிதிவாணன், மாநகர மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நிர்வாகம் பற்றியும், கவுன்சிலர்கள் பற்றியும் சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு வி.சி.க. கவுன்சிலர் செல்வ.புஷ்பலதா, இளையராஜா, பார்வதி உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே போலீசார் அவரை பேச விடாமல் வெளியே அழைத்துச்சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story