சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லை மறுசீரமைக்க கருத்து கேட்பு கூட்டம்


சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லை மறுசீரமைக்க கருத்து கேட்பு கூட்டம்
x

கிருஷ்ணகிரியில் 12 சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆட்சி எல்லை மறுசீரமைப்பு செய்தல் குறித்த கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி

கருத்து கேட்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் உள்ள 12 சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆட்சி எல்லையை வருவாய் மாவட்டம், வருவாய் வட்டத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்தல் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். சேலம் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்) கவிதா, (தணிக்கை) சிவலிங்கம் ஆகியோர் பொதுமக்களின் கருத்துகளை கேட்டனர். பின்னர் அவர்களுக்கு அதிகாரிகள் உரிய விளக்கங்களை அளித்தனர்.

அரசுக்கு கருத்துரு

மேலும் அரசின் கொள்கை படி, பட்டா மாறுதலை எளிமையாக மேற்கொள்ளும் வகையிலும், பொதுமக்கள் தங்கள் ஆவணப்பதிவை விரைவாக மேற்கொள்ளவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், பொதுமக்களின் போக்குவரத்து வசதி, நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தற்போது மாவட்டத்தில் உள்ள 12 சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆட்சி எல்லையை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் சார்பதிவாளர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன், ராஜ்குமார், நரேஷ் உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story