கள்ளக்குறிச்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்ற ஒத்துழைக்கவேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


கள்ளக்குறிச்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்ற ஒத்துழைக்கவேண்டும்    பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x

குப்பையில்லா நகராட்சியாக கள்ளக்குறிச்சியை மாற்ற பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அதிகாரிகள், அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- கள்ளக்குறிச்சி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்கு 6 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைகளை தரம்பிரித்து பெறுவது, நகர்ப்பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்றுதல், பஸ் நிலையம் மற்றும் பஸ் நிழற்குடைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், தூய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல், வீடுகள்தோறும் குப்பைகளை தரம்பிரித்து வாங்குவது, நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

மேலும் பள்ளி மாணவர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் மக்காத குப்பைகளை மாணவர்கள் சேகரித்து வழங்கும் விதமாக விழிப்புணர்வு பணி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியை தூய்மை நகரமாக மாற்றிட வருகிற 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு, ரோட்டரி சங்கங்கள், தன்னார்வலர் அமைப்புகள் உள்ளிட்டோருடன் தீவிர தூய்மைப்பணிகளை அறிவியல் ரீதியாக கையாள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சிகளில் மக்கும் குப்பை சேகரிப்பதற்கு பச்சை நிற வாகனத்திலும், மக்காத குப்பைகளை சேகரிப்பதற்கு நீல நிற வாகனத்திலும் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி கண்காணித்திட அதிகாரிகளை அறிவுறுத்தினார். குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி பொறியாளா் முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு, தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story