என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துகேட்பு கூட்டம்:கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்ததால் பரபரப்பு


என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துகேட்பு கூட்டம்:கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 6:46 PM GMT)

என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

மந்தாரக்குப்பம்,

கருத்து கேட்பு கூட்டம்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட 1, 2, 3 ஆகிய வார்டுகளில் நிலம், வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் மந்தாரக்குப்பத்தில் உள்ள கடலூர் மாவட்ட நில எடுப்பு அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. சார்பாக நில எடுப்பு அதிகாரி ஹஸ்பர் ரோஸ் மற்றும் என்.எல்.சி. நில எடுப்பால் பாதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டோர் நல சங்கத்தினர், 3 வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சலசலப்பு

கூட்டத்தில் கலந்து கொண்ட என்.எல்.சி. அதிகாரிகள் 3 வார்டுகளில் உள்ள நிலம், வீடுகளை அகற்றுவதற்கு முன்பாக அப்பகுதிகளில் உள்ள கோவில்களை அகற்ற ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் நிலம், வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பாக பேச அழைத்து விட்டு, கோவில்களை அகற்றுமாறு கூறுகிறீர்கள் என கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில்களை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோவில்கள், வீடுகள், நிலங்களை தனித்தனியாக எடுக்காமல் எங்களுக்கான வாழ்வாதாரத்தை தெரிவித்துவிட்டு, அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story