பரிசல் பயண கட்டணம் உயர்வு குறித்து ஏரியூரில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
ஏரியூர்
ஏரியூரில் காவிரி ஆற்றில் பரிசலில் செல்ல கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
கருத்து கேட்பு கூட்டம்
ஏரியூர் அருகே உள்ள நாகமரை-பண்ணவாடி பரிசல் துறைக்கும், ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறைக்கும் கடந்த 1-ந் தேதி முதல் பரிசல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் கடந்த 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில், பரிசல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் (கொளத்தூர்), மீனா, ரேணுகா (ஏரியூர்), போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் வலியுறுத்தல்
ஏரியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பரிசல் பயணத்தை அதிக கட்டணம் கொடுத்து பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. இதனால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நடைமுறை செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த சேலம், தர்மபுரி மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.