கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம்


கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம்
x

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையத்தில் கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணிக்காக சின்னசேலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கரும்புகள் ஏற்றிக்கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி நேரங்களில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட நகர பகுதிகளின் வழியாக கரும்புகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வராமல் மாற்று பாதையில் ஆலைக்கு வரவேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு சரியாக வழிவிட வேண்டும். குறிப்பாக டிராக்டர்களை மெதுவாக இயக்க வேண்டும் என்றார். இதையடுத்து டிராக்டர் ஓட்டுனர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பேசினர்.

இதில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் ராம், கரும்புபெருக்கு அலுவலர் செந்தில்குமார், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, திருக்கோவிலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சத்தியன் மற்றும் கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஓட்டுனர்கள் சங்கதலைவர் செல்வம், விவசாயிகள் சங்க நிர்வாகி அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story