சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மைதானம் சீரமைக்கும் பணி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் உரிய இருக்கைகள் அமைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை மற்றும் பந்தல் அமைத்தல், காவல் பாதுகாப்பு பணி, விழாவை காண வரும் மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மைதானத்தை சுற்றி அலங்கரித்தல், பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story