கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்


கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
x

பேரணாம்பட்டு அருகே கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வேலூர்

கருத்து கேட்பு கூட்டம்

பேரணாம்பட்டு தாலுக்கா ராஜக்கல் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் கொண்ட கல்லேரி மலைப்பகுதியில் அமைக்கப் பட உள்ள மல்டி கிரானைட் சுரங்கத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது ராஜக்கல் ஊராட்சி கல்லேரி மலையில் கடந்த 2007-2012-ம் ஆண்டில் கிரானைட் குவாரி இயங்கி வந்துள்ளது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கிரானைட் குவாரியை அரசே நடத்த முடிவு செய்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. சாதகம் மற்றும் பாதகமான சூழ்நிலை குறித்து கருத்து கேட்டு முடிவு செய்யப்படும். கிரானைட் குவாரி நடத்தலாம் அல்லது நடத்த கூடாது என்பது பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கனிமவள தலைமை அலுவலக துணை மேலாளர் கணேசன், கோட்ட மேலாளர் கதிரவன் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கிரானைட் குவாரி எப்படி இயங்கும் என்பது குறித்து விளக்கினர்.

எதிர்ப்பு

கூட்டத்தில் ராஜக்கல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், செல்வராஜ், வேலூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொது செயலாளர் அருண், நாம் தமிழர் கட்சி தொகுதி துணை செயலாளர் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது ராஜக்கல், அழிஞ்சிக்குப்பம், எம்.வி.குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக கல்லேரி மலை இருந்து வருகிறது. இங்கு கிரானைட் குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம், சுற்றியுள்ள வீடுகள் பாதிக்கப்படும். ஏற்கனவே இயங்கி வந்த குவாரியில் 2 உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே கிரானைட் குவாரி அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில் சப் கலெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன், தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் பலராமன், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சலசலப்பு

கூட்டத்தில் ராஜக்கல் ஊராட்சி மன்ற தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கருணாகரன் கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அமர்ந்திருந்த பகுதிக்கு் சென்று உட்கார முயன்றார். அவரை இங்கு உட்காரக்கூடாது என்று கூறியதுடன், அவரிடம்சால்வை வாங்க மறுத்ததுடன், கிராம உதவியாளரை அழைத்து இவரை இறக்கி கீழே உட்கார வையுங்கள் என்றார். உடனே வருவாய்த் துறையினர் ஊராட்சி தலைவரை மேடையில் இருந்து இறக்கி பொதுமக்கள் உட்கார்ந்திருந்த பகுதியில் அமர வைத்தனர்.

பின்னர் கருணாகரன், 100 நாள் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரை கருத்து கேட்பு கூட்டத்திற்கு வரவழைத்தார். இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


Next Story